சிமெண்ட் ஆலைகளை அரசுடைமையாக்க வேண்டும்: கட்டட தொழிலாளர்கள் சங்கம் வேண்டுகோள்

கேபிள் டிவியை போல சிமெண்ட் ஆலைகளையும் அரசுடைமையாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய கட்டட தொழிலாளர்கள் மத்திய சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் மு. பன்னீர்செல்வம் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:

கட்டுமான தொழிலாளர்களுக்கு அதிமுக ஆட்சிக்காலத்தில் நல வாரியம் அமைக்கப்பட்டது. அந்த நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேருவதற்கான நடைமுறைகளை எளிதாக்க வேண்டும். மணல் கொள்ளைகள் அதிக அளவில் நடைபெறுவதால் மணல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் சிமெண்ட் விலையும் உயர்ந்து வருகிறது. இந்த நிலையை மாற்ற மணல் கொள்ளைகளில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

மேலும் தங்களின் விருப்பத்துக்கேற்ப சிமெண்ட் விலையை ஆலை அதிபர்கள் உயர்த்துகின்றனர். இதனால் கட்டுமானத் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே கேபிள் டிவியை அரசுடைமையாக்குவது போல சிமெண்ட் ஆலைகளை அரசுடைமையாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கட்டுமானத் தொழிலாளர்களுக்கும், விவசாய நலவாரிய உறுப்பினர்களுக்கும் ரூ. 500 ஓய்வூதியத் தொகையாக வழங்கப்பட்டு வருகின்றன. இதனை ரூ. 1000-ஆக உயர்த்த வேண்டும்.

அதே போல விபத்தில் இறக்க நேரிடும் க ட்டுமான, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தொகையான ரூ. 1 லட்சத்தை உயர்த்தி ரூ. 2 லட்சமாகவும், இயற்கை மரணத்துக்கு வழங்கப்படும் தொகையை ரூ. 50 ஆயிரமாகவும் உயர்த்த வேண்டும் என்றார் அவர்.

அகில இந்திய கட்டட தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் தலைவர் ஆர். ராமகிருஷ்ணன், பொருளாளர் இ. பரமானந்தம், இளைஞரணித் தலைவர் பி. கோபிநாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More