ஒஸாமாவின் உடலைத் தேடும் பணியில் அமெரிக்கர்

கடந்த மே 2 அன்று ஒஸாமா பின் லேடனை அமெரிக்க கடற்படையின் சீல் கமாண்டோக்கள் பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் என்ற இடத்தில் சுட்டுக் கொன்றதாகவும் பின்னர் ஒஸாமாவின் உடலை கடலில் அடக்கம் செய்து விட்டதாகவும் அமெரிக்க ராணுவம் அறிவித்தது.

ஆனால் ஒஸாமா கடலில் அடக்கம் செய்யப்பட்டது சம்பந்தமாக ஆதாரங்கள் எதையும் அமெரிக்கா வெளியிடவில்லை. அனைத்து சோதனைகளையும் முடிந்த பின்னர் வடக்கு அரபிக்கடல் பகுதியில் முஸ்லிம் மத சடங்குகள் செய்யப்பட்ட பிறகு அதிக எடையுள்ள ஒரு பையில் வைத்து ஒஸாமாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

தற்போது ஒஸாமாவின் உடலைக் கண்டு பிடிப்பதற்காக முன்வந்துள்ளார் பில் வாரன் என்ற அமெரிக்கர். இவர் கலிபோர்னியாவைச் சார்ந்தவர். கடலில் புதையலைக் கண்டுபிடிப்பதற்காகவும் மூழ்கிய கப்பல்களைக் கண்டு பிடிப்பதற்காகவும் உள்ள நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்தத் தொழிலை இவர் 1972 முதல் செய்து வருகிறார். ஒபாமா அரசை தான் நம்பவில்லை என்றும் அதனால்தான் பின்லேடன் உடலைத் தேடும் பணியில் ஈடுபட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதிநவீன சாதனங்கள் உதவியுடன் இந்தப் பணியை செய்யவிருப்பதாகவும் இதற்கு ஏறத்தாழ 400,000 டாலர் செலவிட இருப்பதாகவும் பில் வாரன் தெரிவித்துள்ளார்.

தான் ஒரு அமெரிக்க தேசபக்தன் என்பதால் ஒஸாமாவின் உடலைக் கண்டறிந்து உலகுக்குக் காட்டி உண்மையை உணர்த்த இருப்பதாக சொல்கிறார் 59 வயதாகும் வாரன். ரஷ்யாவைச் சார்ந்த தனது நண்பி ஒருவர் ரஷ்யாவில் உள்ள உயர்நிலை காவல் அதிகாரிகள் ஒஸாமா கொல்லப்பட்டதை நம்பவில்லை என சொன்னதுதான் தனது இந்த முடிவுக்குக் காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குண்டு வெடிப்புகளில் பாகிஸ்தானில் 34 பேர் பலி; 90 பேர் காயம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வட மேற்கு நகரான பெஷாவரிலுள்ள சந்தைப் பகுதியொன்றில் இடம்பெற்ற இருகுண்டு வெடிப்புகளில் 34 பேர் கொல்லப்பட்டதுடன் 90 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். பெஷாவரில் அரசியல் மற்றும் இராணுவ அலுவலகங்கள் அமைந்திருக்கும் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

முதலாவது குண்டுவெடிப்பு சிறியளவிலேயே இடம்பெற்றபோதும் அதற்குச் சில நிமிடங்களில் வெடித்த இரண்டாவது குண்டு பாரியதாக இருந்ததாகவும் இதிலேயே அதிகளவான உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வாகனமொன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த இரண்டாவது குண்டு தூர இருந்து இயக்கும் கருவி மூலம் வெடிக்க வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இக்குண்டு வெடிப்புகள் இடம்பெற்ற பகுதிக்கு அருகாமையில் அரசியல் அலுவலகங்கள், பல பத்திரிகை நிறுவனங்களின் அலுவலகங்கள் மற்றும் படைமுகாம் என்பன அமைந்திருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இப் பகுதியில் பிரசித்திபெற்ற உணவகங்கள் மற்றும் கடைகள் என்பன உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் அல்ஹைடா தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் கொல்லப்பட்டதிலிருந்து பாகிஸ்தானில் போராளிகளின் தாக்குதல் சடுதியாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பி.பி.சி நன்றி

ரஹ்மான் லஞ்சம் கொடுத்து விருது பெறவில்லை-ஆஸ்கர் குழு பதில்

வாஷிங்டன்: இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஆஸ்கர் விருதை பணம் கொடுத்து வாங்கவில்லை என்று ஆஸ்கர் குழு தெரிவித்துள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக 2 ஆஸ்கர் விருதுகளை வாங்கினார். ஆனால் அவர் அதை பணம் கொடுத்து வாங்கியதாக இசையமைப்பாளர் இஸ்மாயில் தர்பார் குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டை ஆஸ்கர் குழு மறுத்துள்ளது.

இது குறித்து அந்த குழு கூறியதாவது,

ஆஸ்கர் விருதுக்கு தவறான நபரை குழு தேர்ந்தெடு்த்துள்ளது என்று ஒருவர் குறை கூறுவது புதிதல்ல. ஆனால் ஒருவர் தவறான வழியில் விருதை வாங்கியுள்ளார் என்று கூறுவது ஆதாரமற்றது, நம்ப முடியாதது.

எங்களுக்கு இஸ்மாயில் தர்பார் பற்றி தெரியாது. அவர் எந்த ஆதாரத்தை வைத்து ரஹ்மான் லஞ்சம் கொடுத்து விருதை வாங்கியதாகக் கூறுகிறார் என்று தெரியவில்லை என்று அகாடமி பத்திரிக்கையாளர் டெனி மெலிடோனியன் தெரிவித்தார்.

கடந்த வாரம் இந்த குற்றச்சாட்டு எழுந்தபோது அதை கேலியான விஷயம் என்று எடுத்துக் கொண்டதால் அதிகாரப்பூர்வமாக பதிலளிக்கவில்லை என்றார்.

இது குறித்து ஆஸ்கர் குழு வேலும் கூறுகையில்,

வாக்கெடுப்பு முறையில் தான் விருது வழங்கப்படுகிறது. அகாடம் அதிகாரி யாராவது குளறுபடி செய்ய வேண்டும் என்று நினைத்தால் கூட முடியாத அளவுக்கு பாதுகாப்பாகத் தான் நடத்தப்படுகிறது.

பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் அலுவலகம் தான் இசை பிரிவுக்கான வாக்கெடுப்பைக் கவனித்து வருகிறது என்று தர்பாருக்கு தெரியாது.

விருது பெறுபவர்களின் பெயர்கள் இருக்கும் கவர்களை 2 அதிகாரிகள் தயார் செய்வார்கள். மேடையில் அந்த கவர்களைத் திறக்கும் வரை அது அவர்கள் பாதுகாப்பில் தான் இருக்கும் என்று கூறியுள்ளது.

இசையமைப்பாளர் இஸ்மாயில் தர்பார் கூறிய குற்றச்சாட்டு,

கடந்த 2008-ம் ஆண்டு வெளியான ஸ்லம்டாக் மில்லினர் படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் 2 விருதுகளை வாங்கியதில் சந்தேகமாக உள்ளது. விளம்பரத்துக்காக அவர் பணம் கொடுத்து இந்த விருதுகளை வாங்கியுள்ளார் என்றே நினைக்கிறேன்.

உண்மையிலேயே ஏ.ஆர்.ரஹ்மான் திறமை உள்ளவர் என்றால் ரோஜா அல்லது பம்பாய் படத்துக்கு ஆஸ்கார் விருது வாங்கி இருக்க வேண்டியதுதானே? அவர் பணம் கொடுத்துதான் விருது வாங்கினார் என்று எனக்குத் தெரியும், என்றார்.

போராட்டமா, நாடகமா?

இந்த வாரம் பரபரப்பாக முடிந்திருக்கிறது. ராம்லீலா மைதானத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோரைத் திரட்டி பாபா ராம்தேவ் தனது பலத்தை நிரூபித்தார்.

கறுப்புப் பணத்துக்கு எதிராக ஆவேசமான போரைத் தொடங்கிய அவர் கடைசியில் பெண்களுக்கும் முதியவர்களுக்கும் பின்னால் ஒளிந்து கொண்டார். நம்பி வந்தவர்களை அப்படியே விட்டுவிட்டு தப்பியோடினார்.

பெண்கள் உடுத்தும் ஆடையில் இருந்த அவரை போலீஸôர் மடக்கிப்பிடித்து தில்லிக்கு வெளியே ஹரித்வாரில் கொண்டுபோய் விட்டனர். அங்கிருந்து உத்தரப் பிரதேசத்துக்குள் நுழைய முயன்ற அவரை மாயாவதி அரசு தடுத்து நிறுத்தியது.

இதனால் முஸôபர்பூருக்குச் செல்லும் அவரது திட்டம் முறியடிக்கப்பட்டது. இவரைக் குறிவைத்தே ஆங்காங்கே 144 தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

பீதியில் ஓடி ஒளிந்த ராம்தேவ் இப்போது ஆயுதமேந்திப் போராடுவோம் என்று நம்மை மிரட்டியிருக்கிறார். ஆண்களும் பெண்களுமாக 11 ஆயிரம் பேருக்கு அவர் ஆயுதப் பயிற்சி அளிக்கப் போகிறாராம்.

யோகா குருவாக அறியப்பட்டவர் இப்போது தனது பாதையை மாற்றிக் கொண்டிருக்கிறார் என்பது மட்டும் தெரிந்துவிட்டது. இப்படிப்பட்டவருக்குத்தான் ஆர்எஸ்எஸ் அமைப்பு ஆதரவளித்துக் கொண்டிருக்கிறது. அதைக்கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், பாஜகவும் இவரை ஆதரிப்பது துரதிருஷ்டவசமானது.

ராம்தேவுக்கு ஆதரவளிப்பதால் ஆர்எஸ்எஸýம் விஎச்பியும் இழக்கப்போவது எதுவுமில்லை. ஆனால், ராம்தேவின் போராட்டத்துக்குக் கைகொடுப்பதற்கு முன்னால் பாஜக நிறைய யோசித்திருக்க வேண்டும். பரபரப்புக்காக விதிகளை மீறிக் கொண்டிருக்கும் ராம்தேவிடமிருந்து விலகியிருப்பதே பாஜகவின் அரசியல் வருங்காலத்துக்கு நல்லது.

காங்கிரஸ் கட்சியும் மத்திய அரசும் நடந்துகொண்டது பாஜகவைவிடவும் மோசம். போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தவுடன் ராம்தேவை விமானநிலையத்துக்கே சென்று மத்திய அமைச்சர்கள் சந்தித்தது கேலிக்கூத்து. ஏற்றுக்கொள்ள முடியாதது.

அந்த சர்ச்சை ஓய்வதற்குள், ராம்லீலா மைதானத்தில் கூடியிருந்தவர்கள் மீது நள்ளிரவில் தடியடி நடத்தியது எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்தது போலாகிவிட்டது. அரசு ஏதோ ஒரு தவறை மறைப்பதற்காக இன்னொரு தவறைச் செய்து, அது ராம்தேவுக்கு மக்கள் மத்தியில் ஒருவிதமான அனுதாப ஆதரவை உருவாக்கியது.

நல்ல வேளையாக ஆயுதப் போராட்டம் நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்ததால் அந்த அனுதாப அலை மாயமாகிப்போயிருக்கிறது.

யோகா குரு முதலில் தனது போராட்டத்தின் நோக்கத்தைத் தெளிவுபடுத்த வேண்டும். கறுப்புப் பணத்தை எதிர்த்துப் போராடுகிறாரா? சரி. அப்படியானால் ஆயிரம் ஏக்கரில் ஆசிரமமும் 34 நிறுவனங்களும், ஓர் ஊடகமும், ரியல் எஸ்டேட் தொழிலும் வைத்திருக்கும் இவரிடம் இருப்பதெல்லாம் வெள்ளைப் பணம்தானா? அதை யார் விளக்குவது?

தன்னிடம் கறுப்புப் பணமே இல்லை என்பதை நிரூபித்துவிட்டு ராம்தேவ் போராட்டம் நடத்தினால்தான் நியாயமாக இருக்கும்.

வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதற்காக சமூகத்தில் அனைத்துப் பிரிவினருமே போராடி வருகின்றனர். புகழ்பெற்ற வழக்கறிஞர்கள், அறுவைச் சிகிச்சை நிபுணர்கள், கட்டுமான வல்லுநர்கள், சூப்பர் ஸ்டார்கள், சினிமா தயாரிப்பார்கள், இயக்குநர்கள், ஓவியர்கள், பெருமுதலாளிகள் என எல்லோருமே இந்தப் போராட்டத்துக்கு ஆதரவளிக்கிறார்கள். அவ்வளவு ஏன்? நாம் யாரைக் குற்றம்சாட்டிக் கொண்டிருக்கிறோமோ அந்த அரசியல்வாதிகளேகூட கறுப்புப் பணத்தை மீட்க வேண்டும் என்று முழங்குகிறார்கள். ஆனால், இவர்களெல்லாம் வருமான வரியை முறையாகச் செலுத்துகிறார்களா என்று தெரியவில்லை.

ஒருவேளை வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவர வேண்டும் என்றுதானே போராடுகிறோம், உள்நாட்டுக் கறுப்புப் பணம் இந்தக் கணக்கில் வராது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ என்னவோ?

அப்படி என்னதான் இரண்டுக்கும் வித்தியாசம் என்று அவர்களைத்தான் கேட்க வேண்டும். அப்படி ஏதாவது வித்தியாசம் இருந்தால், வெளிநாட்டு வங்கிகளில் வட்டியில்லாமல் பணத்தை முடக்குவதற்குப் பதிலாக, உள்நாட்டிலேயே கணிசமான வட்டியுடன் கறுப்புப் பணத்தைச் சேமிக்கலாம் என்று பலர் முடிவு செய்துவிடுவார்கள்.

கறுப்புப் பணப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமானால் உலக நாடுகள் அனைத்தும் தார்மிக அடிப்படையில் செயல்பட வேண்டும். அப்படியில்லாமல் லாபம் கருதிச் செயல்பட்டால் இந்தப் பிரச்னையைத் தீர்க்க முடியாது.

எந்த வங்கியும் தாமாக முன்வந்து கறுப்புப் பணம் தொடர்பான பட்டியலைத் தரப்போவதில்லை. வங்கியின் கம்ப்யூட்டர்களில் புகுந்து திருடினாலோ, குப்பைத்தொட்டியில் கிழித்துப்போட்ட காகிதங்களைத் துருவினாலோதான் கறுப்புப் பணம் வைத்திருப்போர் பட்டியலைப் பெறுவது சாத்தியம்.

இந்த விஷயத்தில் விக்கிலீக்ஸýக்கு என்ன ஆயிற்று? ஏற்கெனவே பல விஐபிகளின் பட்டியலை வைத்திருப்பதாகக் கூறிய ஜூலியன் அசாஞ்சே இன்னும் மெüனமாக இருப்பதன் மர்மம் புரியவில்லை.

உண்மையில் கறுப்புப் பண விவகாரத்தில் ஆக்கப்பூர்வமான தீர்வைக் காண வேண்டுமானால் உலக அளவிலான நடவடிக்கைகளைச் செயல்படுத்தலாம்.

கறுப்புப் பணத்தைக் குவிப்பதற்குத் துணைபோகும் நாடுகளுடன் அரசுமுறை உறவுகளைத் துண்டிப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை உலக அமைப்புகள் பரிந்துரைக்கலாம். இவையெல்லாம் கறுப்புப் பணம் குவிக்கப்படுவதை ஓரளவு தடுக்கும். அப்படியில்லாமல் கறுப்புப் பணம் வைத்திருப்போரும், இல்லாதவரும் எந்த வித்தியாசமும் இல்லாமல் கூடிப் போராட்டம் நடத்துவதெல்லாம் எதற்கும் உதவாது.

சரி. ராம்தேவ் போராட்டம், அதற்குப் பிந்தைய காட்சிகளால் யாருக்கு லாபம் என்பதைப் பார்க்கலாம். இந்த விவகாரத்தால் சந்தேகமேயில்லாமல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு பேரிழப்பு ஏற்பட்டிருக்கிறது.

அரசுக்கு மக்கள் மத்தியில் இருந்த கொஞ்சநஞ்ச மரியாதையும் இப்போது காணாமல் போயிருக்கிறது. அமைச்சரவை மாற்றத்தின் மூலமாக இழந்த மரியாதையை மீட்பதற்கு அரசு முயற்சிக்க வேண்டியதுதான்.

பாஜகவுக்கு எந்த லாபமும் இல்லை. அதேநேரத்தில் இதை அரசியல் பிரச்னையாக மாற்றி தமது செல்வாக்கை உயர்த்திக் கொள்ளவே ராம்தேவ் முயற்சித்திருக்கிறார். அவரிடமிருந்து விலகியிருப்பதே பாஜகவுக்கு நல்லது.

ராம்தேவ் விவகாரம் முடிவதற்குள் அண்ணா ஹசாரே தனது இரண்டாவது உண்ணாவிரதத்தைத் தொடங்கி ஊடகங்களுக்குத் தீனிபோட்டார். ராம்தேவின் போராட்டத்தின்போது போலீஸôர் நடத்திய வன்முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து உண்ணாவிரதம் இருப்பதாக அவர் அறிவித்தார்.

ஆனால், இதைவிடப் பெரிய வன்முறை உத்தரப் பிரதேசத்தின் பட்டா காலன் கிராமத்தில் போலீஸôரால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அங்குதான் சாந்தி பூஷணுக்கு பண்ணை நிலம் இருக்கிறது என்கிற செய்தியும் ஊடகங்களில் அடிபட்டது.

விவசாயிகளின் நன்மைக்காக அண்ணா ஹசாரேவும் அவரது குழுவினரும் அங்கு சென்று போராட்டம் நடத்த வேண்டியதுதானே? மாட்டார்கள்.

தாம் விரும்புவது போன்ற லோக்பால் மசோதா வர வேண்டும் என்று அண்ணா ஹசாரே நினைக்கிறார். லோக்பால் மசோதா வரும், ஆனால் ஹசாரேயின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டதாக அது இருக்காது. எல்லோரும் ஒப்புக்கொள்வதாக அது இருக்கும். துப்பாக்கி முனையில் எந்த அரசையும் நடத்த முடியாது. இதை ஹசாரேயும் மற்றவர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

நடப்பதையெல்லாம் பார்த்தால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஆட்சி செய்யத் தெரியவில்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. முறையான ஆட்சியைத் தராவிட்டால் 2014-ம் ஆண்டுக்கு வெகுமுன்பே தேர்தலைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை காங்கிரஸ் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

காலம் மாறிக்கொண்டிருக்கிறது. பிராந்திய அரசியல் தலைவர்கள் செல்வாக்குப் பெற்று வருகிறார்கள். காங்கிரஸிலும் பாஜகவிலும் பெருந் தலைகளாகக் கருதப்பட்டவர்கள் நம்பகத்தன்மையை இழந்து வருகிறார்கள். பொறுப்பை உணர்ந்து செயல்படாவிட்டால் அவர்களுக்கு அரசியல் எதிர்காலமே கிடையாது.

தேசிய அரசியலை வழிநடத்த புதிய தலைவர்கள் வேண்டும். அந்த வகையில், ராகுல் காந்தி சொல்லும் பாதையில் செல்வதே காங்கிரஸýக்கு உகந்தது. பாஜகவுக்கு வழிகாட்ட நரேந்திர மோடி இருக்கிறார். இரு கட்சிகளுக்குமே மாற்றம் தேவைப்படுகிறது. காலமும் கரைந்து கொண்டிருக்கிறது.

இலவச கலர் டி.வி. திட்டம் ரத்து: முதல்வர் ஜெயலலிதா

சென்னை, ஜூன் 10: இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தப் போவதில்லை எனவும், திமுக ஆட்சியின் போது 7.48 லட்சம் டி.வி.க்களை கொள்முதல் செய்வதற்காக பிறக்கப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

கொள்முதல் செய்து வைத்துள்ள 1.27 லட்சம் டி.வி.க்கள் அனாதை இல்லங்கள், அரசு பள்ளிகள், அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை அளித்த பதில்:

2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் உள்ள மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 42 லட்சம். அதில் கிட்டத்தட்ட 56 லட்சம் குடும்பங்கள் தொலைக்காட்சிப் பெட்டிகளை வைத்திருந்தவர்கள். ஆனால், 1 கோடியே 64 லட்சம் டி.வி.க்களை வழங்கியுள்ளதாக திமுக அரசு கூறுகிறது. தொலைக்காட்சிப் பெட்டி இல்லாதவர்கள் யார் என்ற முழுமையான கணக்கையே முந்தைய அரசு எடுக்கவில்லை.

கடந்த ஜனவரி மாதம் முந்தைய திமுக அரசால் ஆறாம் கட்டமாக 10 லட்சம் டி.வி.க்களை கொள்முதல் செய்ய உத்தரவு வழங்கப்பட்டது.

அவற்றில் இதுவரை கொள்முதல் செய்யப்படாத சுமார் 7 லட்சத்து 48 ஆயிரம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கான உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படாத நிலையில் உள்ள 1 லட்சத்து 27 ஆயிரம் தொலைக்காட்சிப் பெட்டிகள் அனாதை இல்லங்கள், அரசு பள்ளிகள், ஊராட்சிகள், அரசு மருத்துவமனைகள், சுகாதார துணை மையங்கள், அங்கன்வாடி மையங்கள் போன்ற அமைப்புகளுக்கு வழங்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: திமுக அரசால் அமல்படுத்தப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், நோயாளிகள் அறுவை சிகிச்சை மேற்கொண்டாலும் அதில் சேர்க்கப்படாத இனங்களுக்கான கட்டணங்களை தனியார் மருத்துவமனைகள் பயனாளிகளிடம் இருந்தே பெற்றன.

இந்தக் காப்பீட்டுத் திட்டத்துக்கு இதுவரை வழங்கப்பட்ட மொத்தத் தொகை ரூ.850 கோடி. அதில் அரசு மருத்துவமனைகளுக்கு அளிக்கப்பட்ட தொகை வெறும் ரூ.10.49 கோடி. மீதமுள்ளவை தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்றுள்ளன. இந்தக் காப்பீட்டுத் திட்டம் தனியார் மருத்துவமனைகள் அதிகம் வளர்ச்சி அடையவே பயன்பட்டன.

எனவே, இந்தத் திட்டத்தை கைவிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அனைவருக்கும் தரமான மருத்துவ சேவை வழங்கும் நோக்கத்தை எட்டக் கூடிய வகையில் ஒரு புதிய பொது மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தி அனைவரும் தேவையான மருத்துவ வசதி பெறுவதை அரசு உறுதி செய்யும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

உண்ணாவிரதப் புரட்சிகளும் ஷர்மிளா சானுவும்!

ஜனநாயக ஆட்சியதிகாரத்தில் ஆயுதமேந்திப் போராடும் போராட்டங்களைவிட உண்ணாவிரதப் போராட்டங்களே அரசுக்கு எதிரான வீரியமான போராட்டமாக இந்தியாவில் கட்டமைக்கப் பட்டுள்ளது. இத்தகைய சத்யாகிரகப் போராட்டங்களே வெற்றியைத் தரும் என்றதொரு மாயையும் மக்களிடையே ஆழமாக விதைக்கப்பட்டுள்ளது.

ஆனால் உண்மை நிலை என்ன?

அரசு மற்றும் அதிகார வர்க்கத்தின் காதுகளில் ஏழைகள் மற்றும் பலவீனர்களின் குரல்கள் எப்போதுமே விழுவதில்லை. அது சத்யாகிரக போராட்டமாக இருந்தாலும் சரி உண்ணாவிரதப் போராட்டங்களாக இருந்தாலும் சரி! அதே சமயம் வெள்ளையும் சொள்ளையுமாக மேல் தட்டினரிடையே வலம் வரும் கோடிகளுக்கு அதிபதிகளானோர் வாயைத் திறந்தாலே அரசுகள் நடுங்குகின்றன. டாட்டாக்களும் அம்பானி, பிர்லாக்களும்தான் உண்மையில் நாட்டை ஆளுகின்றனர் என்ற காம்ரேட்டுகளின் நீண்டக்கால குற்றச்சாட்டுகளை நினைவில் நிறுத்துவது அவசியம்.

இதற்கான சமீபத்திய மிகப் பெரிய உதாரணங்களாக ஊழலுக்கு எதிராக திடீரென குரல் எழுப்பிய, தம் ட்ரஸ்ட் மீதே ஊழல் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ள அன்னா ஹஸாரேவும் 1200 கோடிக்கும் மேலாக சொத்துக்களையுடைய நட்சத்திர உண்ணாவிரதப் போராட்ட நாயகனான பாபா ராம் தேவும் விளங்குகின்றனர்.


ஊழலுக்கு எதிராக இவர்கள் களம் கண்ட ஒரு வார காலத்துக்குள் நாட்டில் நடக்கும் அமளித்துமளி என்ன! மத்திய அமைச்சர்களே வரிசையில் நின்று இவர்களிடம் சமாதானம் பேசுவதென்ன! அவர்களின் முன்னும் பின்னும் தொலைக்காட்சி ஊடகங்களின் நூற்றுக்கணக்கான மின்னும் கேமிராக்களும் மைக்குகளும் வலம் வருவதென்ன! உண்ணாவிரதப் பந்தலில் அமரும் முன்னரே அவர்களின் கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றை ஏற்றுக் கொண்டதாக அரசுகள் அறிவிப்பதென்ன!


இவையெல்லாம், சத்யாகிரகப் போராட்டங்களில் ஒன்றான உண்ணாவிரதப் போராட்டத்திற்குரிய சக்தி என்றும் அதற்கு அரசுகள் என்றுமே கதிகலங்கி உடனடி நடவடிக்கை எடுக்கும் எனவும் நம்பும் மக்களின் காதுகளில் இந்த ஊடகங்களும் அரசுகளும் நன்றாக பூச்சூடுகின்றன என்பதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

உண்மையில் ஏழை மற்றும் வலிமையற்றோரின் சொல் என்றுமே அம்பலமேறியதில்லை என்பதே உண்மை! இல்லையேல் கடந்த 11 ஆண்டுகளாக அரசுக்கு எதிராக, அப்பாவி மக்களுக்கு எதிரான அரசின் அடக்குமுறை சட்டத்துக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் ஷர்மிளாவை இந்த அரசு கண்டுகொள்ளாதது ஏன்? மின்னும் தொலைக்காட்சி கேமராக்கள் அவரைச் சுற்றி வலம் வராதது ஏன்? ஹஸாரேயும் ராம் தேவும் உண்ணா நோன்பு துவங்குவதாக அறிவித்த 24 மணி நேரத்துக்குள்ளேயே நாட்டின் மத்திய தர வர்க்கத்தில் பெரும்பாலோருக்கு மிகப் பரிச்சயமானோராக அவர்கள் மாறிவிட்ட நிலையில், கடந்த 11 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் ஷர்மிளாவைக் குறித்து எத்தனை சதவீதம் மக்களுக்குத் தெரியும்?


தெரியாதோர் இப்போது தெரிந்து கொள்வதற்காக ஷர்மிளாவின் உண்ணாவிரதப் போராட்டம் குறித்த தகவல் இதோ:


இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்புச் சட்டம் (AFSPA) அமல்படுத்தப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இச்சட்டத்தைத் திரும்பப்பெறக் கோரி கடந்த 11 ஆண்டுகளாக ஐரோம் ஷர்மிளா சானு என்ற சமூக சேவகி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்.

மணிப்பூரின் சில பகுதிகளில் அமலில் இருக்கும் ஆயுதப்படை சிறப்பு சட்டத்தின்கீழ், சந்தேகப்படும் எவரையும் எவ்வித விசாரணையோ ஆதாரமோ இன்றிச் சுட்டுப் பிடிக்கவோ அல்லது கைது செய்து சிறையில் அடைக்கவோ முடியும். இதனால் ராணுவம் மற்றும் துணை ராணுவ வீரர்களால் பாதிக்கப்படும் அப்பாவிகள்கூட தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க முடியாத நிலை இருந்து வருகிறது. ஆங்கிலேயனின் அடக்குமுறை ஆட்சியினைவிடவும் கேவலமான அடக்குமுறை கொண்ட இந்தக் காட்டுமிராண்டிச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரியே ஐரோன் ஷர்மிளா கடந்த 11 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்.

குளுகுளு ஏசி, மினரல் வாட்டர், விலையுயர்ந்த கம்பளம், நூற்றுக்கணக்கான மின் விசிறிகள் முதலான சர்வ வசதிகளும் கொண்ட ஐந்து நட்சத்திர அந்தஸ்துடன்கூடிய பந்தலில் உண்ணாவிரதமிருந்த ராம்தேவ், தற்போது ஊடகங்களுக்கு நன்றாக தீனிபோட்டு வருவதால் பிரதமர் முதல் காபினட் அமைச்சர்கள்வரை அவர்மீது அக்கரை செலுத்தி, அவரது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளனர்.

அன்னா ஹசாரே என்ற காந்தியவாதிக்கு இணையாக தன்னைக் காட்டிக்கொண்டுள்ள, ஆயிரத்தின் மடங்கு காசை வீசுவோருக்கு யோகா சொல்லிக்கொடுக்கும் ராம்தேவின் ஓரிரு நாட்கள் உண்ணாவிரதம் அரசியல் மட்டங்களில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் கருப்புப் பணத்திற்கு எதிராகப் போராடுவதாகச் சொல்லிக்கொள்ளும் பாபா ராம்தேவ், முறையற்ற வகையில் திரட்டிய சொத்துக்களின் மதிப்பு ரூ.1200 கோடிக்கும் அதிகம் என்று சொல்லப்படுகிறது.

விவசாயிகளின் நிலத்தையே அபகரித்ததாக ஆதாரத்துடன் கூடிய வழக்கும் இவரின் நிறுவனத்திலேயே ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படுவதில்லை என்ற பிரச்சனையும் ஏற்கெனவே நிலுவையிலிருக்கும் நிலையில்தான் ஊழலுக்கு எதிராக இக்கதாநாயகன் களமிறங்கியுள்ளது, நகைப்பின் உச்சக்கட்டம்!

வெளிநாட்டில் முதலீடு செய்துள்ள கருப்புப்பணத்தை தேசிய உடமையாக அறிவிக்க வேண்டும் என்று முழங்கும் ராம்தேவுக்கு வெளிநாடுகளிலும் கோடிக்கணக்கான சொத்துக்கள் உள்ளன. ரூ.500, ரூ.1000 காகித நாணயங்களைத் தடைசெய்யக்கோரும் ராம்தேவ் சாதாரண யோகா வகுப்புக்கு வசூலிக்கும் குறைந்த நுழைவுக் கட்டணமே ரூ.1000. அனைத்து தொழிலாளர்களுக்கும் சமச்சீரான ஊதியம் வழங்கவேண்டுமென கோரும் இக்கதாநாயகனின் நிறுவனத்தில், முறையாக ஊதியம் வழங்காததற்காகவும் ஊதிய உயர்வுக்காகவும் போராடிய தொழிலாளர்களின் வேலைக்குக் கல்தா! என்னே ஒரு சமூக உணர்வு இக்கதாநாயகனுக்கு!

ஊழலுக்கு எதிராக லோக்பால் சட்ட மசோதாவை நடைமுறைப் படுத்தக்கோரும் காந்தியவாதி அன்னா ஹசாரேயின் தொண்டு நிறுவனத்திலும் முறைகேடு நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகி ஊழலுக்கு எதிரான போராட்டங்கள் கேலிக்கூத்து ஆக்கப்பட்டுள்ளன.


இவ்வாறு பணபலம், ஆட்பலம், அதிகார ஆதரவுடன் உண்ணாவிரதப் போராட்ட கதாநாயகர்களாக வலம் வரும் இந்த உத்தமப் புருசர்களுக்கு(!) இடையில், கடந்த 11 ஆண்டுகளாக பலமுறை கைது செய்யப்பட்டுச் சிறையிலும் வலுக்கட்டாயமாக குளுக்கோஸ் மூலமாகவும் டியூப் மூலமாகவும் உணவு உட்செலுத்தப்பட்டு, தன் போராட்டத்தை மழுங்கடித்து இல்லாமலாக்க முயற்சிக்கும் அரசின் அடக்குமுறைக்கு எதிராக சாதாரண ஒரு பெண் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு விடிவு கிடைக்குமா?


இவரின் போராட்டம் கடந்த 11 ஆண்டுகளில் உலகில் பல தளங்களில் எதிரொலித்ததன் விளைவாக, கடந்த 2004 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஜீவன் ரெட்டி தலைமையில் 5 நபர்கள் கொண்ட கமிசனை மத்திய அரசு அமைத்தது. இந்தக் கமிட்டி, ஷர்மிளா சானுவின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக, "குறிப்பிட்ட சட்டத்தில் வரம்புமீறல்கள் நடந்துள்ளதாகவும் அச்சட்டம் நீக்கப்பட வேண்டும் அல்லது குறைந்தபட்சம் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்" என அறிக்கை சமர்ப்பித்தது.

எப்போதும் போல், எல்லா கமிசன்களையும் போல் இக்கமிசன் அறிக்கையினையும் தூக்கிக் குப்பையில் போட்டுவிட்டு, கார்ப்பரேட் போராட்டக்காரர்களான ராம்தேவ்களின் பின்னால் அரசியல்வாதிகள் சுற்றி வருகின்ற அயோக்கியத்தனம் ஊடகக் காமிராக்களின் ஆசியுடன் சிறப்பாக இங்கு அரங்கேறுகிறது.


அன்னா ஹஸாரேவின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கும்(!) கார்ப்பரேட் சாமியார் ராம் தேவின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கும்(!) அமைக்கத் தோன்றாத கமிசன் ஷர்மிளாவின் 11 ஆண்டு உண்ணாவிரதப் போராட்டத்துக்குப் போடப்பட்டதன் மர்மம் என்ன?


விடை மிகத் தெளிவு!


ஹஸாரேயும் ராம் தேவும் கையிலெடுத்தது, நடுத்தர-ஏழை மக்களிடம் அரசின் இமேஜை நிமிடத்தில் தகர்க்க வைக்கும் ஊழல் விஷயம். இவர்களின் உண்ணாவிரதத்தைத் தொடரவிட்டால், அரசியல்வாதிகளின் இருப்பு கேள்விக்குறியாக்கப்படும். அதற்கு ஒப்பவே, ஊடகங்களும் நடுத்தர வர்க்கத்தினரிடையே இவர்களின் போராட்டத்தை மிக வேகமாக கொண்டு சேர்த்தன.


ஆனால், ஷர்மிளாவின் போராட்ட விஷயம் ஒரு குறிப்பிட்டப் பகுதி மக்களுக்கு எதிரான அடக்குமுறை, அட்டூழியத்திற்கு எதிரானதாகும். இது எவ்வகையிலும் இந்தியாவின் பிற மாநில மக்களைப் பாதிக்கப்போவதில்லை. அவ்விஷயத்தை இந்த ஊடகங்கள் கையிலெடுத்தால், அது எந்த அளவுக்கு மக்களிடம் விலைபோகும் என்பது கேள்விக்குறியே!


இதனை உணர்ந்ததாலேயே ஷர்மிளாவின் 11 ஆண்டு போராட்டத்திற்குக் கொடுக்காத முக்கியத்துவத்தை இந்தக் கார்ப்பரேட் போராட்டக்காரர்களுக்கு ஊடகங்களும் கொடுக்கின்றன. அதற்கே இந்த அரசுகளும் செவிசாய்க்கின்றன. எல்லாம் வியாபார மயம்!


அடக்குமுறை சட்டங்கள் மூலம் தினசரி வாழ்வு நசுக்கப்பட்டு அடக்கி ஒடுக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக இந்த கார்ப்பரேட் சாமியார்களும் காந்தியவியாதிகளும் குரல் கொடுத்துப் பார்க்கட்டுமே பார்க்கலாம்!


இன்றைய காலத்தில் வீடுதோறும் உட்புகுந்துள்ள இணைய வசதியிலுள்ள சமூக தளங்களின் மூலம் தம் கருத்துகளை வெளிப்படையாக தெரிவிக்கவும் நாட்டு விசேசம் நிமிடங்களில் கைகளில் வந்துசேரும் அளவுக்கு நிலைமை முன்னேறியுள்ள நிலையில், ஊழல் மற்றும் முறைகேட்டுப் பெருச்சாளிகளின் இந்த உண்ணாவிரத நாடகங்களுக்கு மத்தியில் அதற்குக் கூட்டு நிற்கும் ஊடக பாரபட்சத்திற்கு மத்தியில் 11 ஆண்டுகளாக தன் வாழ்க்கையை முதலீடாகக் கொடுத்து போராடி வரும் ஷர்மிளாவின் உண்ணா விரதப்போராட்டம் இனிமேலாவது சமூகத் தளங்களில் ஒலிக்கட்டும்!


ஊடகங்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உண்ணாவிரதம் மற்றும் அமைதியான போராட்டங்களின் மீது இப்போதும் மதிப்பும் மரியாதையும் இருந்தால், மணிப்பூரின் இரும்புப் பெண் மாண்புமிகு ஐரோன் ஷர்மிளா சானுவின் நியாயமான கோரிக்கைக்கும் கொஞ்சம் செவி சாய்த்து அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லட்டும்.

இதய ஆரோக்கியத்துக்கு

ஹார்ட் அட்டாக் கேள்விப்படும்போது பயங்கரமா தான் இருக்கும். ஹார்ட் அட்டாக் வந்துட்டதால, அதோட எல்லாமே முடிஞ்சு போச்சுன்னு நினைச்சு, வாழ்க்கையை வெறுக்க வேண்டியதில்லை. ரெண்டு, மூணு முறை அட்டாக் வந்து பிழைச்சு, நிறைய காலம் ஆரோக்கியமா வாழறவங்களும் இருக்காங்க. வந்ததை நினைச்சு பயப்படாம, அடுத்து எப்படி இருக்கணும், அதுக்கு என்ன சாப்பிடணும், எப்படி சாப்பிடணும்னு தெரிஞ்சுக்க வேண்டியது அவசியம்.

இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் யாருக்கெல்லாம் வர வாய்ப்பு அதிகம்?

நீரிழிவு உள்ளவங்க, சிறுநீரகக் கோளாறு உள்ளவங்க, சிகரெட் பழக்கமுள்ளவங்க, உடல் பருமனானவங்க, மொனோபாஸ் கடந்தவங்க, எப்போதும் டென்ஷனா இருக்கிறவங்க, எந்த வேலையும் செய்யாம உடல் இயக்கமே இல்லாதவங்க, ஏற்கனவே குடும்பத்துல யாருக்காவது இதய நோய்கள் இருக்கிறவங்க, இவங்க எல்லாம் ஜாக்கிரதையா இருக்கிறது நல்லது.

இதய நோய்க்கான அறிகுறி நெஞ்சு வலியாதான் இருக்கணும்ணு அவசியமில்லை. அடிக்கடி தலைவலி, தலை சுற்றல், பார்வைத் தடுமாற்றம், ஞாபகமறதி, மூச்சு விடறதால சிரமம், தோள்பட்டை வலி. இதுல எது இருந்தாலும், அது இதய நோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம்னு உடனே டாக்டரை பார்க்கிறது அவசியம். சிகிச்சை, உடற்பயிற்சி, இது எல்லாத்தையும் விட முக்கியம் உணவு. அமெரிக்கால எல்லா உணவுகள்லயும் 'டிரான்ஸ்ஃபேட்'னு சொல்லப்படற அடர்த்தி குறைவான மிதக்கும் கொழுப்பு இருக்காங்கிறதை பேக்கிங் லேபிள்ல போடணும்னு சட்டம் இருக்கு. நம்மூர்ல அப்படி எதுவும் இல்லாதது பெரிய குறை.

எதை சாப்பிடலாம், எது கூடாதுங்கிற விழிப்புணர்வு இல்லாம, கண்டதையும் சாப்பிட்டு நோய்களை விலை கொடுத்து வரவழைச்சுக்கறோம். சாப்பாட்டு விஷயத்துல ரொம்ப முக்கியமா கவனிக்க வேண்டியது ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ், சில வகை உணவுகளை சமைக்கிறபோதே, சத்துகள் ஆக்சிஜனோட சேர்ந்து ஆவியாகி வெளியேறிவிடும். அதைத் தடுக்க ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அவசியம். கிரீன் டீ, பழங்கள், காய்கறிகள்ல இந்த ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகமா இருக்கு. உடம்புல கொழுப்பு அதிகமா இருக்கிறப்ப, ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் தங்காது. கூடவே நச்சுப் பொருளும் சேர்ந்து உண்டாக்கிற கோளாறுகள்ல இதய நோயும் ஒன்று. காய்கறிகளும் பழங்களும் எல்லாருக்கும் அவசியம்னு சொல்ல இது இன்னொரு காரணம்.

இதயம் பலவீனமானவங்க தவிர்க்க வேண்டிய உணவுகள்:

மீன் தவிர அத்தனை அசைவ உணவுகளையும்.

ஒரு முட்டைல 210 மி.கி. கொலஸ்ட்ரால் இருக்கிறதால, அது கூடவே கூடாது.

பேக்கிங் பவுடர் சேர்த்துச் செய்தவை, நெய், வெண்ணெய், சீஸ், தேங்காய், காபி, டீ, உருளைக்கிழங்கு சிப்ஸ், டின்ல அடைச்ச உணவுகள், தக்காளி சாஸ் கெட்ச்சப், ஃப்ரோஸன் உணவுகள் அதாவது உறைநிலை உணவுகள், அஜினோமோட்டோ இந்த எதுவும் வேண்டாம்.

'ஊறுகாயும் அப்பளமும் இருந்தா போதும், வேற எதுவும் வேணாம்'னு சாப்பிறவங்க பலர். இந்த ரெண்டையும் போல ஆபத்தானது வேற இல்லை. காரணம், அதுல சேர்க்கப் படற உப்பு. அந்தக் காலத்துல அப்பளம் நல்லா விரிஞ்சு பொரியணும்னு பிரண்டை சாறு விடுவாங்க. இப்ப அதுக்குப் பதில் சோடியம். ஊறுகாயும் அதே மாதிரிதான். அதிக உப்பு ரத்தக்கொதிப்பை அதிகமாக்கி, இதய நலனைப் பாதிக்கும்.

சாப்பிடக்கூடிய உணவுகள்:

கீரை, முழு தானியங்கள், காய்கறிகள்,

அசைவத்துல மீன் மட்டும் (அதுல உள்ள ஒமோக 3 கொழுப்பு அமிலம் இதயத்துக்கு நல்லது)

ஓட்ஸ், பூண்டு, சின்ன வெங்காயம்.

தினசரி சமையல்ல சாதாரண புளிக்குப் பதிலா கொடம்புளி உபயோகிக்கலாம். கோக்கம்னு சொல்லப்படற கொடம்புளியை எந்தவித குழம்புலயும் சேர்க்கலாம். ரத்தத்துல கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி, இதயத்தைப் பாதுகாத்து, உடல் எடையையும் குறைக்கும் இது. கொழுப்பு குறைஞ்சாலே, இதயம் உள்ளிட்ட அத்தனை உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்கும்.

இந்திய விமானப்படை பணிக்கு ஆள் சேர்ப்பு

தேனி: இந்திய விமானப்படைக்கு, ஜூலை 18ல் ஆள் சேர்ப்பு முகாம் சென்னையில் நடக்கிறது. 

1990 ஜூலை 1 முதல் 1994 செப்டம்பர் 30 வரை பிறந்த, புதுவை மற்றும் தமிழகத்தை சேர்ந்த திருமணம் ஆகாத இளைஞர்கள் பங்கேற்கலாம். குரூப் "ஒய்'(நான் டெக்னிக்கல்) பிரிவிற்கு, பிளஸ்-2 தேர்வில் அறிவியல், கலை அல்லது வணிகவியல் பாடங்களுடன் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பாலிடெக்னிக்குகளில், ஏதாவது ஒரு இன்ஜினியரிங் பிரிவில் மூன்றாண்டு டிப்ளமோ படிப்பில், குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். குரூப் "எக்ஸ்'(டெக்னிக்கல் டிரேட்கள்), பிளஸ்-2 தேர்வில், கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது மூன்று ஆண்டு டிப்ளமோ படிப்பில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி பிரிவுகளில் குறைந்தது 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 

தாம்பரத்தில் ஜூலை 18ல் ஆள்சேர்ப்பு முகாம் நடக்கிறது. காலை 6 முதல் 10 மணிக்குள் பங்கேற்க வேண்டும். 

அசல் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு ஏழு புகைப்படங்கள், விளையாட்டு உடை, இருப்பிடச்சான்றிதழ்களுடன் பங்கேற்க வேண்டும்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More