பஸ்சுக்குள் கருகி 22 பேர் பலி : விபத்து நடந்தது எப்படி? பஸ் டிரைவர் பேட்டி!

வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே நேற்று இரவு தனியார் ஆம்னி பஸ் விபத்துக்குள்ளானதில் 5 பெண்கள் உள்பட 22 பேர் பலியாயினர். கட்டுப்பாட்டை இழந்த பஸ் பாலத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. ஏசி மெஷின் வெடித்து தீப்பிடித்ததில் இந்த கோர சம்பவம் நிகழ்ந்தது. பலியான 5 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. சென்னையில் இருந்து நேற்று இரவு 8.30 மணிக்கு தூங்கும் வசதி கொண்ட கேபிஎன் டிராவல்ஸ் பஸ் பொள்ளாச்சிக்கு புறப்பட்டது. சேலத்தை சேர்ந்த டிரைவர் நாகராஜன் பஸ்சை ஓட்டினார். பஸ்சில் 7 பெண்கள் உள்பட 23 பேர் பயணம் செய்தனர். இரவு 10.45 மணி அளவில் வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே உள்ள அவலூர் என்ற இடத்தில் பஸ் வந்து கொண்டிருந்தது.

அப்போது பஸ்சுக்கு முன்பு 2 லாரிகள் போட்டி போட்டு சென்றுள்ளன. திடீரென ஒரு லாரி நிலைதடுமாறி, பஸ்சின் பக்கவாட்டில் உரசியது. பஸ் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பக்கவாட்டில் உரசிக்கொண்டே, அருகில் இருந்த சிறிய பாலத்தின் மீது மோதியது. இதில் முன் சக்கரங்கள் இரண்டும் உடைந்ததால், பாலத்துக்கு கீழே 15 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. அதேநேரம் ஏசி மெஷின் வெடித்ததால் குபீரென்று தீ பிடித்தது. பஸ் முழுவதும் கொளுந்துவிட்டு எரிந்தது. பயணிகள் அனைவரும் தூக்க கலக்கத்தில் இருந்ததால் அவர்களால் என்ன நடந்தது என்பதை யூகிக்கக்கூட முடியவில்லை. உயிர் பிழைக்க அவர்கள் பஸ்சுக்குள் அங்கும் இங்கும் ஓடினர். பஸ் இடது பக்கம் சாய்ந்து கிடந்ததால் கதவை திறந்துகொண்டு வெளியே வர முடியவில்லை.

டிரைவர் நாகராஜன் கதவை உடைத்துக்கொண்டு பயணிகளை காப்பாற்ற வெளியே ஓடிவந்தார். ஆனால் கதவை திறக்க முடியவில்லை. அதே நேரத்தில் பஸ்சின் பின்னால் அமர்ந்திருந்த கார்த்திகை ராஜா என்ற பயணி, கண்ணாடி உடைந்ததால் வெளியே வந்துவிட்டார். அவர்கள் இருவரும் லேசான காயத்துடன் தப்பினர். 50 அடி உயரத்துக்கு தீ எரிந்ததால் அவ்வழியாக வாகனங்களில் சென்றவர்களால் காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. பஸ்சுக்குள்ளேயே தீயில் கருகி 22 பயணிகளும் பரிதாபமாக பலியானார்கள். தகவல் அறிந்ததும் காவேரிப்பாக்கம், சோளிங்கர், வாலாஜா பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்களால் எரிந்துகொண்டிருந்த தீயைத்தான் அணைக்க முடிந்தது. அதற்குள் எல்லாமே முடிந்துவிட்டது. அடையாளம் காண முடியாத அளவுக்கு உடல்கள் கருகிவிட்டன.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜய், போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சுற்றுச்சூழல் அமைச்சர் சின்னய்யா, சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி ஜார்ஜ், வடக்கு மண்டல ஐஜி ரமேஷ் குடாவாலா ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு அவர்களும் மீட்பு பணியை முடுக்கி விட்டனர்.

உயிர் தப்பிய டிரைவர் நாகராஜன், அதே வழியில் வந்த பஸ்சில் ஏறிச்சென்று வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். உயிர்தப்பிய கார்த்திகை ராஜா காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் தீவிர சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து தொடர்பாக காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியானவர்களின் உடல்கள் அனைத்தும் வாலாஜா அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.இதற்கிடையே விபத்துக்கு காரணமான 2 லாரிகளின் டிரைவர்களையும் காணவில்லை. அவர்களும் இந்த விபத்தில் காயம் அடைந்திருக்கக் கூடும் என தெரிகிறது. அதனால் ஏதாவது ஒரு மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சை பெற்று வரலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து லாரி டிரைவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இறந்த 22 பேரின் உடல்களும் வாலாஜா அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. அங்கு உறவினர்கள் திரண்டு வந்து கதறி அழுதனர். கருகிய நிலையில் இருந்ததால் உடல்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது.

எனினும் 5 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உதவியாளர் இளங்கோவனின் மருமகன் பொள்ளாச்சியைச் சேர்ந்த டாக்டர் சுப்பிரமணி (29) என்பவரின் உடல் அடையாளம் காணப்பட்டது. அவரது கையில் அணிந்திருந்த பிரேஸ்லெட் மூலம் உறவினர்கள் அடையாளம் கண்டறிந்தனர். பொள்ளாச்சியை சேர்ந்த சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் வெங்கடேசன் (72) உடலும் அடையாளம் காணப்பட்டது. அவரது கழுத்தில் ஒட்டியிருந்த நவரத்தினமாலை, சட்டையில் வைத்திருந்த வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றைக் கொண்டு உறவினர்கள் அடையாளம் கண்டுபிடித்தனர். விபத்தில் உயிர் தப்பிய கார்த்திக் ராஜாவின் மனைவி சுனிதா (32) உடலும் அடையாளம் தெரிந்தது. அவர் அணிந்திருந்த சேலையின் நிறத்தை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கார்த்திக்கின் நண்பர்கள் மாசானமுத்து, பரத் ஆகியோரின் சடலங்களும் அடையாளம் காணப்பட்டது.

விபத்து நடந்தது எப்படி? பஸ் டிரைவர் பேட்டி

பஸ் டிரைவர் நாகராஜன் (51) கூறியது: காவேரிப்பாக்கம் அருகே அவலூரில் வந்தபோது பஸ்சுக்கு முன்னால் இடதுபுறம் ஒரு லாரியும், வலதுபுறம் ஒரு லாரியும் ஜோடியாக சேர்ந்தாற்போல் வேகமாக சென்றுகொண்டு இருந்தன. இதனால் அவற்றை முந்திச்செல்ல ஹாரன் அடித்தேன். வலதுபுறம் சென்ற லாரி முன்னால் செல்ல, அந்த லாரிக்கு பின்னால் இடதுபுறம் சென்ற லாரி சென்று, சாலையில் இடதுபுறமாக பஸ்சுக்கு வழிவிட்டது. அவற்றை முந்திச் செல்ல முயன்றேன். அப்போது எதிர்பாராதவிதமாக லாரிகள் மோதிக் கொண்டன. பின்னால் சென்ற லாரி நிலைதடுமாறி திடீரென இடதுபுறமாக திரும்பியது. பஸ்சின் டீசல் டேங்க் பகுதியில் அந்த லாரி உரசியது. இதில் நிலை தடுமாறிய பஸ், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் பாய்ந்தது. கஷ்டப்பட்டு, பஸ்சை சாலைக்கு திருப்ப முயன்றேன். ஆனால் சாலையோரத்தில் பாலத்தின் தடுப்பு சுவரில் பஸ் மோதி, பள்ளத்தில் இடதுபுறமாக கவிழ்ந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் டீசல் டேங்க் வெடித்து தீப்பிடித்தது. பஸ் திகுதிகுவென்று எரிய ஆரம்பித்தது. இடிபாட்டில் சிக்கிக்கொண்ட எனது காலை கஷ்டப்பட்டு எடுத்தேன். பயணிகள் பகுதியில் மரண ஓலம் கேட்டது. பயணிகளை காப்பாற்றுவதற்காக கேபின் கதவை திறக்க முயன்றேன். கதவுகள் நசுங்கியிருந்ததால் திறக்க முடியவில்லை. அதற்குள் தீ பஸ் முழுவதும் வேகமாக பரவி விட்டது. இவ்வாறு டிரைவர் கூறினார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More