இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வட மேற்கு நகரான பெஷாவரிலுள்ள சந்தைப் பகுதியொன்றில் இடம்பெற்ற இருகுண்டு வெடிப்புகளில் 34 பேர் கொல்லப்பட்டதுடன் 90 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். பெஷாவரில் அரசியல் மற்றும் இராணுவ அலுவலகங்கள் அமைந்திருக்கும் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
முதலாவது குண்டுவெடிப்பு சிறியளவிலேயே இடம்பெற்றபோதும் அதற்குச் சில நிமிடங்களில் வெடித்த இரண்டாவது குண்டு பாரியதாக இருந்ததாகவும் இதிலேயே அதிகளவான உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வாகனமொன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த இரண்டாவது குண்டு தூர இருந்து இயக்கும் கருவி மூலம் வெடிக்க வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இக்குண்டு வெடிப்புகள் இடம்பெற்ற பகுதிக்கு அருகாமையில் அரசியல் அலுவலகங்கள், பல பத்திரிகை நிறுவனங்களின் அலுவலகங்கள் மற்றும் படைமுகாம் என்பன அமைந்திருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இப் பகுதியில் பிரசித்திபெற்ற உணவகங்கள் மற்றும் கடைகள் என்பன உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் அல்ஹைடா தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் கொல்லப்பட்டதிலிருந்து பாகிஸ்தானில் போராளிகளின் தாக்குதல் சடுதியாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பி.பி.சி நன்றி







0 கருத்துரைகள்:
Post a Comment